Tuesday 12 February 2013

நெல்லுக்கு மாற்றாக வசம்பு: லாபம் பெறலாம்

சிதம்பரம், ஆக. 4: ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு, வேளாண் இடு பொருள்களின் விலை உயர்வு, நெல்லுக்கு கட்டுப்படியான விலை இல்லாதது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுடன் உள்ள விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக அதிக லாபம் தரும் மருத்துவப் பயிரான வசம்புவை பயிரிடலாம்.


அஜீரணம், வயிற்றுப்போக்கு, தலைவலி, மூல வியாதி, இதயநோய், கண், காது நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது வசம்பு. சிறு குழந்தைகள் உணவு செரிக்காமல் வயிற்றுவலிக்காக அழுதால் கிராமப்புறங்களில் இன்றும் வசம்பு விழுதை பாலில் கலந்து கொடுப்பார்கள். சிறிது நேரத்தில் வயிற்றுவலி நின்று குழந்தைக்கு பசிக்கத் தொடங்கிவிடும்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் ஏற்றுமதி பயிரான வசம்புவை காவிரி டெல்டா விவசாயிகள் நெற்பயிருக்கு மாற்றாக பயிரிடலாம் என முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தது: காவிரி டெல்டா பகுதியான நாகை மாவட்டத்தில் சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசம்புவை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வசம்பு தற்போது அதிகமாக பயிரிடப்படுகிறது. வசம்பு 10 மாத பயிராகும்.

அதன் வேர் பகுதியில் விளைந்த வசம்பை நன்றாக காய வைத்து பின்புதான் விற்பனை செய்ய முடியும். வசம்பை எந்த நோயும் தாக்குவதில்லை. இதனால் பூச்சிமருந்து அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாகுபடி செலவும் நெற்பயிருக்கு ஆவதைவிட ஏக்கர் ஒன்றுக்கு 2 முதல் 3 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு டன் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை விற்பனையாகும்.

மருத்துவப் பயிரான வசம்பு ஏற்றுமதியாகும் பொருள்களில் ஒன்றாகத் திகழ்வதால் அதற்கு வேளாண் சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. மேலும் அறுவடைக்கு முன்பு வசம்பிலிருந்து பக்கவாட்டில் வெடித்து வரும் சிம்புகளை நாற்றாக விற்பனை செய்யலாம். ஒரு ஏக்கரில் 4 ஏக்கருக்கு உரிய நாற்றும் கிடைக்கிறது. வசம்பு பயிரிடும் செலவில் 25 சதவீதத்தை மத்திய அரசு தேசிய மூலிகைப் பயிர்கள் வாரியம் மானியமாக வழங்குகிறது.

Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.