Tuesday 17 January 2012

குமரிக்கண்டம்

குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர்[1] ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:

சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
பாண்டியனை வாழ்த்தும் பொழுது
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)
"தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க." [2]
இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
"குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)
"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.
இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.

இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக தென்மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

.......கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து எடுக்கபட்டது

Monday 16 January 2012

தமிழ்

தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்,ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது