Monday 16 January 2012

தமிழ்

தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்,ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது

No comments:

Post a Comment