வேளாண்மை அல்லது விவசாயம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். வீட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் (பயிர்கள்)உற்பத்தியைக் கொண்டு நாகரிகங்களுக்கு வழிவகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். உணவுப் பெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் நிலத்தொடர்புச் சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது. கால்வாய்களை வெட்டுதல் மற்றும் பல்வேறு வகையிலான நீர்ப்பாசனங்கள் மூலம் பயிர் வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு விவசாயம் தொடர்புகொண்டிருக்கிறது. பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல்,மேய்ச்சல் நிலம் அல்லது தரிசுநிலத்தில் கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை விவசாயத்தின் அடித்தளமாக விளங்குகின்றன.
மனித சமூகங்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வேளாண்மை செய்துவந்துள்ளன. வரலாற்றில், வேளாண்மையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் வெவ்வேறு தட்பவெப்ப நிலைகள், பண்பாடுகள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றைச் சார்ந்து மாறுபட்டும் இருந்துள்ளன. எனினும், விலங்குகளையும் தாவரங்களையும் பழக்கப்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டுவர நிலத்தைப் பண்படுத்துவதற்காக, பல நிலையிலான தொழில்நுட்பங்களையே வேளாண்மை நம்பி இருந்துள்ளது. தாவரங்களைப் பயிர்செய்ய நீர்ப்பாசனம் தேவை. தரிசுப் பயிர்முறையும் உள்ளது. விலங்குகளை வளர்க்க புல்வெளிகள் தேவை. வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழில்நுட்ப வேளாண்மைமுறை மேலோங்கியதால் "ஓரினச் சாகுபடி" (monoculture) பரவலாகியுள்ளது.
எனினும், வேளாண்மைத் தொழிலை இயற்கையோடு இசைய நிகழ்த்தும் முறைகளாக "நெடு வேளாண்மை" (permaculture) மற்றும் "உயிரி வேளாண்மை" (organic agriculture) என்பவை இன்று நடைமுறைக்கு வந்துள்ளன. விவசாயத்தைப் பற்றிய ஆய்வு என்பது வேளாண் அறிவியல் எனப்படுகிறது. வேளாண் அறிவியல் சார்ந்த தாவர வளர்ப்பு என்பது தோட்டக்கலை எனப்படுகிறது.
No comments:
Post a Comment